இலங்கை காப்புறுதிச் சங்கம் (Insurance Association of Sri Lanka - IASL) தனது உறுப்பு நிறுவனங்களின் உற்சாகமான பங்கேற்புடன் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதத்தில் ‘காப்புறுதி மாதத்தை’ அனுட்டித்து வருகின்றது. இலங்கை அரசாங்கத்தால் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 ஆம் திகதி தேசிய காப்புறுதி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் இந்த வருடத்தின் காப்புறுதி மாதம் ஆரம்பமாகும் நிலையில், தொற்றுநோய் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது முன்னர் ஒரு போதும் முகங்கொடுத்திராத வகையில் எழுந்த நெருக்கடிகளின் போது, காப்புறுதி மூலமான பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், IASL ஆனது, ‘விழிப்புடன் இருந்து பாதுகாக்கப்படுவோம்’ (Staying aware is staying protected) என்ற கருப்பொருளுடன் ஊக்குவிப்புப் பிரச்சாரமொன்றை முன்னெடுக்கின்றது.
இன்றைய நுகர்வோர் தேவைகளைப் பொறுத்தவரையில், சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் அவர்களின் முன்னுரிமைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. அதிகரித்து வரும் பணவீக்கம், வரிகள் மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றின் பின்னணியில், வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய காப்புறுதித் தொழில்துறை தயாராக உள்ளது. விரைவான வேகத்தில் டிஜிட்டல் மாற்றத்தை உள்வாங்கிக்கொண்ட முதன்முதல் தொழில்துறைகளில் காப்புறுதித் துறையும் ஒன்று என்று சொல்வது மிகவும் பொருத்தமானது. வாடிக்கையாளர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக தொழில்துறையானது காப்புறுதித் திட்டங்கள் தொடர்பான புத்தாக்கங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றது. வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட காப்புறுதித் தீர்வுகளை உருவாக்க வாடிக்கையாளர் நடத்தைகளை அடையாளம் காண தரவு மற்றும் ஆராய்ச்சியில் இந்தத் தொழில்துறை பெருமளவில் முதலீடு செய்கின்றது. டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளை நோக்கி தொழில்துறை வலுவாக நகர்வதால், செயற்கை நுண்ணறிவு, கணினி தரவு அறிவு மற்றும் தன்னியக்கமயமாக்கம் உள்ளிட்ட டிஜிட்டல்மயமாக்கலை ‘Insure-tech’ முன்னெடுத்துச் செல்கின்றது. மேலும், வாடிக்கையாளர்களுடனான தொடர்புப் புள்ளிகளை பௌதிக ரீதியாகவும் டிஜிட்டல் ரீதியாகவும் அதிகரிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் சௌகரியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இணையவழி (ஒன்லைன்) கொடுப்பனவு நுழைமுகங்கள், வட்டியின்றிய இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள், வாடிக்கையாளர் செயலிகள், எளிமைப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் உள்ளிணைப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களில் சீரமைக்கப்பட்ட காப்புறுதி திட்ட வழங்கல் மற்றும் இழப்பீட்டுக்கோரல் செயல்முறைகள் இன்றைய டிஜிட்டல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மிகவும் ஒழுங்குமுறைக்குட்படுத்தப்பட்ட தொழில்துறை என்பதால், வாடிக்கையாளர்கள் தமது முதலீடுகள் மற்றும் காப்புறுதி சேவை வழங்குநர்களிடமிருந்து பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தொழில்துறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றிணைந்து குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மேன்) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், இந்நாட்டு மக்களுக்கு வலுவூட்டுவதிலும் காப்புறுதித் துறை முக்கிய பங்காற்றுகின்றது. இத்தொழில்துறையில் தற்போது 63,000 ஊழியர்களுக்கு மேல் தொழில்புரிவதுடன், இதன் மூலமாக 63,000 குடும்பங்கள் மறைமுகமாக பயனடைகின்றன.
உலகளாவிய காப்புறுதித் துறையின் புதிய போக்குகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு இந்தத் தொழில்துறை உறுதிபூண்டுள்ளது. இதில் சமீபத்தைய அம்சமாக, IFRS17 (சர்வதேச நிதி அறிக்கை தரநிலை) ஐ பின்பற்றுவதுடன், இது தொழில்துறையின் நிதியியல் அறிக்கையை அடிப்படையில் மாற்றும் ஒரு கணக்கியல் தரநிலையாகும். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை காப்புறுதித் தொழில்துறை இந்த முறையுடன் இயங்கும்.
இலங்கையில் காப்புறுதித் துறையின் உச்ச அமைப்பாக, இலத்திரனியல், அச்சு, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட பல தொடர்பாடல் தளங்களில் பொது மக்கள் மத்தியில் காப்புறுதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க தனது வளங்கள் அனைத்தையும் IASL பயன்படுத்துகின்றது. காப்புறுதித் துறையானது விசாலமான அளவில் விற்பனை ஆளணியைக் கொண்டுள்ளதுடன், இது பொது மக்களிடையே காப்புறுதியை ஊக்குவிக்கின்றது. அனைத்து காப்புறுதி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் காப்புறுதி ஆலோசகர்கள் காப்புறுதி செய்யப்படுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செப்டெம்பர் மாதத்தில் முன்னெடுத்துவருகின்றது.
இலங்கை காப்புறுதிச் சங்கம் தொடர்பான விபரங்கள்
இலங்கை காப்புறுதிச் சங்கம் (Insurance Association of Sri Lanka - IASL) நாட்டின் காப்புறுதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும். இது 1989 இல் உருவாக்கப்பட்டது. காப்புறுதி வணிகத்தை முன்னெடுக்கும் அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் IASL இன் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது, அனைத்து 27 பதிவுசெய்யப்பட்ட காப்புறுதி நிறுவனங்களும் IASL இன் உறுப்பினர்களாக உள்ளதுடன், சங்கம் அதன் உறுப்பினர்களின் பொது அக்கறை மற்றும் நலனை பாதிக்கும் விடயங்களில் ஒத்துழைப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்க காப்புறுதியாளர்களை ஒன்றிணைக்கும் பொதுவான நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றது. அத்துடன், அதன் முயற்சிகளுக்கு ஒத்ததாக, இலங்கை பொதுமக்களுக்கு காப்புறுதி மூலம் பாதுகாப்பு வழங்கும் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

